Wednesday, May 27, 2009

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும்: சமரசிங்க நம்பிக்கை


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும்: சமரசிங்க நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகக் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் இலங்கைக்குப் போதியளவு ஆதரவு இருப்பதாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பது நிரூபிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
“எம்மீது விசாரணை நடத்தப்படவேண்டிய தேவை இல்லை. பல்வேறு தரப்பினரால் அரசியல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லையென நான் கருதுகிறேன்” என அமைச்சர் ஜெனீவாவிலிருந்து ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்.
எனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவையென மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கூறவில்லையென அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“எமக்கு எதிராகப் போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வீசா வழங்கவில்லையென்ற கேள்விகள் எதுவும் எழாது. ஏனெனில், உள்ளூர் விவகாரங்களை அரசாங்கம் சட்டரீதியாகக் கையாழும்” என்றார் அமைச்சர்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பதிலறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, பஹ்ரெய்ன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவுதி அரேபியா, எகிப்து, நிக்கரகோவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதுடன், இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கிய ஈராக் தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன், இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது.

No comments:

Post a Comment