Tuesday, May 26, 2009

பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்


விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாக இறுதிவரை உறுதிமொழி வழங்கிய கே.பி. இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையென அமைச்சர் கூறினார்.

“வேண்டுமென்றே கே.பி. அவ்வாறு செய்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் கட்டுப்பாடு கே.பி.யின் கீழேயே இருந்தது. இறுதி மோதலில் பிரபாகரன் கொல்லப்படவேண்டுமென விரும்பிய கே.பி., அவ்வாறு பிரபாகரன் கொல்லப்பட்டாலே தான் அடுத்த தலைவராகமுடியும் நினைத்திருந்தார்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாடுகளில் கே.பி. முன்னெடுத்த பிரசாரங்களாலேயே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடமிருந்து பெருமளவு நிதி புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டதாக கருணா அம்மான் குற்றஞ்சாட்டினார்.

“விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் எந்த உதவியும் செய்யக்கூடாதென நான் வேண்டுகோள்விடுக்கிறேன். அந்த அமைப்பு தற்பொழுது இல்லை. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும்” என்றார் அவர்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் குமரன் பத்மநாதனும் இணைந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாகக் கூறி சதிசெய்து அவரைக் கொலைசெய்திருப்பதாகத் தமிழ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கிழக்கிலுள்ள புலிகள் சரணடைய நடவடிக்கை

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் காட்டுப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைவதற்குத் தனது உதவியை நாடியிருப்பதாகவும் அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார்.

கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னைத் தொடர்புகொண்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அனைத்துத் தலைவர்களும் சரணடையவுள்ளனர். ராம் என அறியப்பட்டவரைத் தவிர ஏனையவர்கள் சரணடையத் தயாரெனக் கூறி கடந்த ஒரு வாரமாக என்னைத் தொடர்புகொண்டுவருகின்றனர். இந்த விடயத்தை நான் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியப்படுத்தினேன். அவர்கள் உடனடியாகச் சரணடைந்தால் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க நாம் தயார்” எனக் கருணா அம்மான் கூறினார்.

No comments:

Post a Comment