Saturday, January 31, 2009

உடையார்கட்டில் புலிகளின் நீர்மூழ்கி, தற்கொலைப் படகுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, உடையார் கட்டுப் பிரதேசத்தில் இன்று (29) காலை படையினர் நடத்திய சோதனையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நீர்மூழ்கி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியைக் கண்டு பிடித்தனர். இதன் நீளம் 35 அடியைக் கொண்டது.மேலும் புலிகளின் தற்கொலைப் பிரிவுக்குச் சொந்தமான மூன்று படகுகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினரான வே. பாலகுமாரன் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.கடந்த திங்கட்கிழமை (19) உடையார்கட்டுப் பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதலின் போதே அவர் படுகாயமடைந்ததாகத் தெரிய வருகிறது.ஆனால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் எதிர்வரும் சில வாரங்களில் கைதுசெய்யப்பட்டு விடுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பிரபாகரன் முல்லைத்தீவுக் காட்டுக்குள் பதுங்குகுழிகள் மாறி மாறி ஒழிந்திருப்பதாக இந்தியாவின் டைம்ஸ்நௌவ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறினார்.எதிர்வரும் வாரங்களில் பிரபாகரனின் எதிர்காலம் என் என்பதை உலகம் அறிந்துகொள்ளும் என கோதபாய தனது செவ்வியில் குறிப்பிட்டார்.“முன்னரங்கப் பகுதிகளிலிருந்து அவர் கட்டளைகளை வழங்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள்ளேயே அவர் இருக்கிறார். அவர் இறந்துவிட்டாரா அல்லது வேறு நாட்டுக்குத் தப்பியோடிவிட்டாரா என்பது எதிர்வரும் 2-3 வாரங்களில் தெரியவரும். குழிக்குள் இருந்துகொண்டு அவரால் என்ன செய்யமுடியும்?” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.

No comments:

Post a Comment